காரிமங்கலம், ஜூலை 19:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் ‘துரை கோப்பை’ கிரிக்கெட் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. நரசிம்மன் தொடங்கி வைத்தார்.
அமைப்பின் தலைவர் துரை (எ) சின்னதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கலைச்செல்வன், சிவா, தினேஷ், ராகுல், முருகன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.51 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.41 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.31 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.21 ஆயிரம் மற்றும் ஐந்தாம் பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், வெற்றி பெறும் அணிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் பெறுகின்றன.
அரசியல் விவகாரங்கள் குறித்தும் கருத்து
போட்டியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், பல்வேறு அரசியல் மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
பழனி கோயில் நிலம் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு தனிப்பட்ட முறையில் ஆசிரியர் பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருந்தால் அது தவறான நடவடிக்கையாகும் என்றும் விமர்சித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை எதிர்ப்போம் என்றும், அந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக முதல்வர் விஜய், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தொடர்புகொண்டு மேகதாது அணை தொடர்பான நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுக்க, அண்ணாமலை தலைமையில் தூதுக்குழுவாக சென்று டி.கே. சிவக்குமாரை சந்திக்கவும் தயாராக இருப்பதாக சி. நரசிம்மன் தெரிவித்தார்.
.gif)

.jpg)