தருமபுரி, ஜூலை 17:
தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் "தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகம்" என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி. பரஞ்சோதி தலைமை தாங்கி பயிற்சியைத் தொடங்கி வைத்தார். தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிறுவனர் இர. தினகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழர் வரலாறு, கல்வெட்டுகள், தமிழி (தமிழ் பிராமி) எழுத்தின் தொன்மை, அதன் வரலாற்றுப் பெருமை மற்றும் பாதுகாப்பின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் சதீஷ், வரலாற்றுத் துறைத் தலைவர் திருவாசகம், வேதியியல் துறைத் தலைவர் மற்றும் அலுவலக நிர்வாகி பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினரை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர்.
பயிற்சியின் போது, உலகின் தொன்மையான எழுத்து மரபுகளில் ஒன்றாக விளங்கும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்தின் சிறப்புகள், கல்வெட்டுகளை வாசிக்கும் முறைகள், தமிழி எழுத்துக்களை எழுதும் பயிற்சி மற்றும் பண்டைய தமிழரசர்களின் வரலாற்றுச் சான்றுகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேலும், தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டில் முதல்முறையாக "தமிழி (தமிழ் பிராமி) எழுத்தில் கையொப்பமிடும்" விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை கல்லூரி முதல்வர் முனைவர் சி. பரஞ்சோதி தமிழி எழுத்தில் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் தமிழி எழுத்தில் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே தமிழின் தொன்மை, கல்வெட்டு மரபு மற்றும் பண்பாட்டு பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தமிழ்மொழியின் எழுத்து மரபை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான முயற்சியாக அமைந்தது.
.gif)

.jpg)