தருமபுரி, ஜூன் 09:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித்திட்டம் (SCPAR) 2025-26-ன் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பிகள் மற்றும் செங்கற்கள் தரமானவையாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, காரிமங்கலம் ஒன்றியம் சின்னமாட்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளி மேற்கூரை பழுதுபார்க்கும் பணிகளை பார்வையிட்டார்.
அதேபோல், மல்லிகுட்டை ஊராட்சிக்குட்பட்ட இராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி சுற்றுச்சுவர் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், தனலட்சுமி, உதவி பொறியாளர் இளவேனில் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)