Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.


பாலக்கோடு, ஜூன் 09:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளியப்பன், தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்தில் உள்ள கிணற்றிற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றின் உள்ளிருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதால் எட்டிப் பார்த்துள்ளார்.


அப்போது, சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் 7 அடி தண்ணீருக்குள் புள்ளிமான் ஒன்று தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள், மீட்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கி சுமார் இரண்டு மணி நேரம் போராடி புள்ளிமானை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர்.


பின்னர் மீட்கப்பட்ட புள்ளிமான் பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் புள்ளிமானை பரிசோதனை செய்தபோது அது நலமுடன் இருப்பது தெரியவந்தது. உணவு தேடி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்தியதால் தப்பி ஓடும் போது கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் வனவிலங்கு ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies