Type Here to Get Search Results !

மொரப்பூர் அருகே ரயிலில் உயிரிழந்த பீகார் தொழிலாளியின் உடலை நல்லடக்கம் செய்த ‘மை தருமபுரி’ அமைப்பினர்.


தருமபுரி, ஜூலை 19:


மொரப்பூர் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் உடலை, உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில், மனிதநேய அடிப்படையில் ‘மை தருமபுரி’ அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.


பீகார் மாநிலம் சிங்ஙாசனி கிராமத்தைச் சேர்ந்த சோத்திலால் ராம் (29) என்பவர் கூலி வேலைக்காக ஈரோட்டிற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்தால் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிரே வந்த சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், கடும் வறுமை காரணமாக உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘மை தருமபுரி’ அமரர் சேவை அமைப்பினர் உயிரிழந்தவரின் உடலை தங்களது உறவினராக கருதி, தருமபுரி ரோட்டரி எரிவாயு தகன மையத்தில் அனைத்து மரியாதைகளுடனும் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர். பின்னர் அவரது அஸ்தியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


இந்த நிகழ்வில் சேலம் ரயில்வே காவல் நிலைய காவலர் பிரபாகரன், மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 229 ஆதரவற்றோர் மற்றும் உறவினர்களால் பெற்றுச் செல்ல இயலாதவர்களின் உடல்களுக்கு மனிதநேய அடிப்படையில் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies