தருமபுரி, ஜூன் 09:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான) கடன் மற்றும் கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. திட்டம்-1-ன் கீழ் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். திட்டம்-2-ன் கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்கள் பயன்பெறலாம்.
திட்டம்-1-ன் கீழ் தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை 6 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் மற்றும் பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கான விராசாத் கடன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 5 சதவீதம் மற்றும் பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு திட்டம்-1-ன் கீழ் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை 7 சதவீத வட்டியிலும், திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம் மற்றும் பெண்களுக்கு 8 சதவீத வட்டியிலும் ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. திட்டம்-1-ன் கீழ் 3 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரையும், திட்டம்-2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் மற்றும் மாணவியர்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரையும் கல்விக் கடன் வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)