பென்னாகரம், ஜூலை 21:
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் பென்னாகரம் நகர வர்த்தக சங்கம் இணைந்து, உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாமை வியாழக்கிழமை காலை பென்னாகரம் வாசவி மஹால் (பழைய கன்னிகா பரமேஸ்வரி கோவில் வளாகம்) பகுதியில் நடத்தவுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் பென்னாகரம் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து வகையான உணவு வணிகர்களும் கலந்து கொள்ளலாம். உணவு தயாரிப்பாளர்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரிகள், உணவகங்கள், மளிகைக் கடைகள், தேநீர் மற்றும் பெட்டிக்கடைகள், குளிர்பானம் மற்றும் குடிநீர் தயாரிப்பாளர்கள், பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பாளர்கள், பால் குளிரூட்டும் நிலையங்கள், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள், நடமாடும் உணவகங்கள், துரித உணவகங்கள், பானிபூரி, காய்கறி மற்றும் பழ விற்பனையாளர்கள், நடைபாதை உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும் கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உரிமம் பெறாதவர்கள், புதுப்பிக்காதவர்கள் மற்றும் புதுப்பிக்க வேண்டியவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம் பெற விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை அல்லது வேறு ஏதேனும் அடையாள ஆவணம் (பான் கார்டு/ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை), வணிகம் நடைபெறும் இடத்திற்கான வாடகை ஒப்பந்தம் அல்லது ஊராட்சி வரி ரசீது நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முகாமிற்கு வர இயலாதவர்கள், உணவு பாதுகாப்புத் துறையின் FOSCOS இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து உரிமம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பென்னாகரம், பருவதனஹள்ளி, கெட்டூர், அஞ்சேஅள்ளி, பனிஞ்சரள்ளி, ஆதனூர், நாகதாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவு வணிகர்களிடம் முகாம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருகிறார். நகர வர்த்தக சங்கத்தினரும் நகரின் முக்கிய வணிகப் பகுதிகளில் முகாம் குறித்த தகவல்களை வணிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
.gif)

.jpg)