அரூர், ஜூலை 21:
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் விநியோகக் குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்புகள் எடுப்பவர்கள் மீது இணைப்பு துண்டிப்பு, அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரூர் வட்டம் பைரநாயக்கன்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது, பிரதான குடிநீர் விநியோகக் குழாயில் இருந்து தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு எடுத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், வெங்கடாபுரம் மற்றும் நாகமரத்துப்பள்ளம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு திட்டமிட்ட அளவில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதான குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக இணைப்பு எடுப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுபோன்ற செயல்களால் பிற பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோத இணைப்புகள் கண்டறியப்பட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, அபராதம் மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் குறித்து தகவல் தெரிந்தால், அருகிலுள்ள ஊராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கு தகவல் தெரிவித்து, சீரான குடிநீர் விநியோகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)