பாலக்கோடு, மே.21:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவின் 7வது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு காளை வீதம் மொத்தம் 12 காளைகள் விழாவில் கலந்து கொண்டன.
முன்னதாக கிராம மக்கள் மேளதாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து, புனித நீரை காளைகளின் மீது தெளித்தனர். பின்னர் ஊர் கவுண்டர் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு விரட்டிச் சென்றனர். இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பாலக்கோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)