Type Here to Get Search Results !

சித்தேரி மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 215 பயனாளிகளுக்கு ரூ.93.51 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


பாப்பிரெட்டிப்பட்டி, மே.21:

 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் உள்வட்டத்திற்குட்பட்ட சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 215 பயனாளிகளுக்கு ரூ.93.51 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த் துறை சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, இ-பட்டா, இறப்புச் சான்று, வாரிசுச் சான்று உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூக பாதுகாப்புத் திட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, தாட்கோ, தொழிலாளர் நலன் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.


இதில் 60 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 13 பேருக்கு துரித மின் இணைப்புகள், 2 பேருக்கு நுண்ணீர் பாசன கருவிகள், விவசாயிகளுக்கு வேளாண்மை நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெற்றனர். முன்னதாக, பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.


அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், “தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் அனைத்து நலத்திட்டங்களும் கிராமப்புற மக்களுக்கு முழுமையாக சென்றடைய மக்கள் தொடர்பு முகாம்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற்று தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.


மேலும், முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இம்முகாமில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் செம்மலை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies