தருமபுரி, ஜூலை 27:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தருமபுரி மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் மை தருமபுரி அமைப்பினர் மனிதநேய அடிப்படையில் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு நல்லடக்கம் செய்தனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பநில்புரியல் கிராமத்தைச் சேர்ந்த ஆல்பின் என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வேலை காரணமாக லாரியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டோல்கேட் பகுதியை கடந்து சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பாலக்கோடு காவல் நிலையம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தருமபுரிக்கு வந்த அவரது உறவினர்கள், பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள உதவுமாறு மை தருமபுரி அமைப்பினரை அணுகினர்.
இதையடுத்து, உறவினர்களின் சம்மதத்துடன் பச்சையம்மன் கோவில் மயானத்தில் ஆல்பினின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த மனிதநேயப் பணியில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா மற்றும் அமைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 232 புனித உடல்கள் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். இந்த மனிதநேயச் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
.gif)

.jpg)