சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட கிளை சார்பில் தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன் நாளிதழ் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் நாளிதழ் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது, தவெக சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த இரு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய சங்க நிர்வாகிகள், தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு விரைவாக அமல்படுத்த வேண்டும் என்றும், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவர் சுரேஷ், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் புகழேந்தி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ராமதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் நந்தகுமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட இணைச் செயலாளர் குரு பிரசாத் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
.gif)

.jpg)