காரிமங்கலம், மே.26:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் உள்ளூர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுச்சந்தையில் ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் வியாபாரம் களைகட்டியது. இந்த வாரச்சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.
நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காரிமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனை அதிகரித்தது. சந்தையில் வெள்ளாடு, செம்பரி ஆடு, குறும்பாடு மற்றும் கிடா ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. வழக்கமாக ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஆடுகள், தற்போது ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் விலைக்கு விற்பனையாகின. மேலும், ஆடுகளின் எடை மற்றும் ரகத்திற்கு ஏற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால் காரிமங்கலம் வாரச்சந்தையில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)