கடத்தூர், மே.26:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் புளியம்பட்டியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வருடாந்திர செயல் திட்டம் (AAP) 2025-2026-ன் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் காளான் விதை தொகுப்பு உற்பத்தி செய்யப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காளான் விதை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.துரிஞ்சிப்பட்டியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் எடையை பரிசோதித்தார்.
மேலும், மின்னணு தராசுகள் மற்றும் விற்பனை முனைய கருவிகள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து, குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். தரமான பொருட்களை எடையளவு குறையாமல் வழங்க வேண்டும் என கடை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் வாசிகவுண்டனூர் முதல் கும்பரஹள்ளி வரை செல்லும் நீரோடையில் ரூ.2.53 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கேபியன் தடுப்பணை பணிகளையும், பையர்நத்தம் ஊராட்சி ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
அதேபோல், வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோழிமேக்கனூரியில் ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் நாற்றுபண்ணை கூடத்தில் 10 ஆயிரம் நாற்றுகள் வளர்க்கப்பட்டு வருவதையும், பட்டுகோணம்பட்டியில் ஏரி புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. அறிவழகன், திரு. ஆசாத், உதவி திட்ட அலுவலர் திரு. அருண்குமார், மாவட்ட வள பயிற்றுநர் திரு. வெங்கடேஷ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)