Type Here to Get Search Results !

வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 55 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


தருமபுரி | பிப்ரவரி 06:


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளின் விவசாய நிலங்களின் பாசனத்திற்காக, இன்று முதல் 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.


ஆயக்கட்டுதாரர்களின் வேண்டுகோளை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ரெ.சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி மாவட்ட ஆட்சியர் இன்று (06.02.2026) வாணியாறு அணையிலிருந்து பாசனத்திற்கான நீரை திறந்து வைத்தார்.


2025–2026 ஆம் ஆண்டில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 06.02.2026 முதல் 01.04.2026 வரை 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள நீர் பழைய ஆயக்கட்டு பகுதிகளின் பாசனத்திற்காக வழங்கப்படுகிறது.


புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு நான்கு நனைப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நனைப்பிலும், முதல் மண்டலத்திற்கு 5 நாட்களும், இரண்டாம் மண்டலத்திற்கு 5 நாட்களும் என மொத்தம் 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விடப்பட்டு, பின்னர் 5 நாட்கள் நிறுத்தப்படும். இந்த சுழற்சி முறையில் மொத்தம் 55 நாட்களுக்கு பாசன நீர் வழங்கப்படும்.


இந்த திட்டத்தின் மூலம் மோளையானூர், வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத்தம், தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 15 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அறிவிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சரவணன், உதவி செயற்பொறியாளர் மோகனப்பிரியா உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies