தருமபுரி – பிப்ரவரி 07:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடத்தப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் இம்முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, 18 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 10 பழங்குடியினர் பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் 4 நபர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்ட அட்டைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 30 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், முழுமையான உடல் பரிசோதனைகளுடன் 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமின் மூலம் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவம், இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது–மூக்கு–தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு வந்த அனைவருக்கும் ஆபா கார்டு (ABHA Card) உருவாக்கப்பட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் (CMCHIS) பதிவு செய்யப்பட்டது.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. கண்புரை உள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட மக்கள் இந்த உயர் மருத்துவ சேவை முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மரு. சாந்தி, துணை இயக்குநர் சுகாதாரம் மரு. இராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு. சரவணன், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)