பாலக்கோடு, மே.27:
தருமபுரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக விவசாய அணி மாநில தலைவர் டி.ஆர். அன்பழகனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்ததை தொடர்ந்து, பாலக்கோட்டில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுகவின் மூத்த முன்னோடியான டி.ஆர். அன்பழகன், அம்மா பேரவை முன்னாள் செயலாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், முன்னாள் ஆவின் பெருந்தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் அரூர் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்ட செயலாளராக அவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த வாரம் தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்ததுடன், தருமபுரி மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக ஆலோசனையும் மேற்கொண்டார். இந்த நிலையில், பாலக்கோடு தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக டி.ஆர். அன்பழகன் பாலக்கோட்டிற்கு வருகை தந்தார். அப்போது, பாலக்கோடு பேருந்து நிலையம் முன்புள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் டி.ஆர். அன்பழகனுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)