தருமபுரி – பிப்ரவரி 07:
தருமபுரியில் உள்ள ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பேருந்து நிலையத்தை நம்பி வாழ்ந்து வந்த வணிகர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 28.09.1980 அன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் பல தசாப்தங்களாக தருமபுரி நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக செயல்பட்டு வந்தது. 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தருமபுரி பேருந்து நிலையம் தற்போதைய இடத்திலேயே புதுப்பிக்கப்பட்டு செயல்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்ததாக வணிகர்கள் நினைவூட்டுகின்றனர்.
ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தருமபுரி–பென்னாகரம் சாலையில் சோகத்தூர் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்தை கடந்த 05.02.2026 அன்று முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அனைத்து பேருந்துகளும் உடனடியாக புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன.
ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை நம்பி கடைகள் நடத்தி வந்த வணிகர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் வருமானமின்றி கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பழைய பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
.gif)

.jpg)