Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மூக்காரெட்டிப்பட்டியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


தருமபுரி, ஜன.24:


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மூக்காரெட்டிப்பட்டி ஸ்டான்லி கல்வியியல் கல்லூரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று (24.01.2026) நடைபெற்றது.


இந்த முகாமினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில், 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், மேலும் 10 பயனாளிகளுக்கு கலைஞர் காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.


தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம் 30 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.


“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமின் மூலம், அனைத்து வகையான உடல் பரிசோதனைகளுடன், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால மற்றும் குழந்தை நல மருத்துவம், இதயநல, நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது–மூக்கு–தொண்டை, மனநல, இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள், அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டன.


மேலும், முகாமிற்கு வருகை தரும் அனைவருக்கும் ஆபா கார்ட் (ABHA Card) உருவாக்கப்பட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (CMCHIS) கீழ் பதிவு செய்து வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கண்புரை நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.


கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குறைந்த குழந்தைகள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் பாதித்தவர்கள், படுக்கையிலிருக்கும் நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்த முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அனைவரும் இந்த உயர்தர மருத்துவ சேவை முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்வில், அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் திரு. செம்மலை, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சு. சரவணன், பழங்குடியினர் நல அலுவலர் திரு. அசோக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies