தருமபுரி – ஜனவரி 20:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
-
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
-
காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரந்தர அரசு பணியிடங்களாக நிரப்ப வேண்டும்.
-
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும்.
-
சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடை நிதி வழங்க வேண்டும்.
-
குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும்.
இந்த கோரிக்கைகள், 43 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகள் எனக் குறிப்பிட்ட அவர்கள், திமுக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம் – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கினர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயா உள்ளிட்டோர் உட்பட 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவனஈர்ப்பு போராட்டம், காத்திருப்பு போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் என பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெற்று வந்தும், அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

.jpg)