தருமபுரி, ஜன. 25:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம்–2026” என்ற திட்டத்தின் கீழ், தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (25.01.2026) தொடங்கின.
இந்த போட்டிகளை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அடிப்படை மட்டத்திலான விளையாட்டுப் பங்கேற்பை வலுப்படுத்தவும், இளைஞர்களிடையே துடிப்பான விளையாட்டு கலாச்சாரத்தை வளர்க்கும் தொலைநோக்குப் பார்வையுடனும், தமிழ்நாடு அரசு “இது நம்ம ஆட்டம்–2026” என்ற தலைப்பில் இந்த முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழாவை மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தி வருகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் வலுவான போட்டிப் பாதையை உருவாக்கியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக இவ்விழா, வட்டார மற்றும் மாவட்ட அளவில் ஒரு கட்டமைக்கப்பட்ட ஆண்டு தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“இது நம்ம ஆட்டம்–2026” விளையாட்டு விழா, தமிழ்நாட்டின் 388 கிராமப்புற வட்டாரங்கள் மற்றும் 37 மாவட்டங்களிலும் நடைபெற்று, 16 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களை பெருமளவில் ஈடுபடுத்துகிறது. வட்டார அளவில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முன்னேறுவார்கள். இதன் மூலம் அடிப்படை மட்டத்திலான விளையாட்டு ஆர்வம் புத்துயிர் பெறுவதுடன், விளையாட்டின் வழியாக சமூக நல்லிணக்கமும் வலுப்பெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான போட்டிகள் இன்று (25.01.2026) மற்றும் 27.01.2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் தடகளம், வாலிபால், கபாடி, கயிறு இழுத்தல், எறிபந்து, கிரிக்கெட் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.
பரிசுத் தொகையாக, ஒன்றிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.3,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.2,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.1,000 வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு ரூ.6,000, இரண்டாம் பரிசு ரூ.4,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. மாநில அளவிலான கபாடி மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் முதல் பரிசு ரூ.75,000, இரண்டாம் பரிசு ரூ.50,000, மூன்றாம் பரிசு ரூ.25,000 வழங்கப்பட உள்ளது.
மேலும், தமிழக முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ செலவுடன் கூடிய தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ செலவுகள் அனுமதிக்கப்படும். விளையாட்டு விடுதி மாணவிகள், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்றவர்கள், ஸ்டார் அகாடமி வீரர்கள் மற்றும் கேலோ இந்தியா திட்ட வீரர்களுக்கான காப்பீட்டு அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திருமதி தே. சாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)