பொம்மிடி, ஜன.25:
பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வந்தாமன் அவர்களை பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
இந்த சந்திப்பின்போது, பொம்மிடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் சந்தித்து வரும் பயண சிரமங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பொம்மிடியில் நின்று செல்லாததால், பயணிகள் மாற்று நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நேரம் மற்றும் செலவு சுமையை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வந்தாமன், கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பொம்மிடியில் நிறுத்தம் பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த கோரிக்கை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் பா. ஜெபசிங், இணைச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில எஸ்.டி. அணி செயற்குழு உறுப்பினர் ராமன் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
.gif)

.jpg)