காரிமங்கலம், ஜன. 20:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மாட்லாம்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தின் கீழ், விண்ணப்பப் படிவங்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீண்டும் சேகரிக்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தன்னார்வலர்கள் பொதுமக்களிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி, விண்ணப்பங்களை முறையாக வழங்கி திரட்டும் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். பொதுமக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இந்த திட்டத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலகப் பதிவேடுகள், இ-சேவை மையத்தின் செயல்பாடுகள், ஆதார் மைய சேவைகள், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மற்றும் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த் துறை சேவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வருவாய் கிராமங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் காலதாமதமின்றி உரிய தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, காரிமங்கலம் வட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

.jpg)