தருமபுரி – டிசம்பர் 15
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூர் கிராமத்தில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் அவர்களின் மகன் பி. எழில்மறவன் – கிருத்திகா திருமண விழா இன்று நடைபெற்றது. இத்திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
உரையில் முதலமைச்சர் பேசுகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் சூழலில் இங்கு வந்தபோது மனதிற்கு ஓர் அமைதி கிடைப்பதாக தெரிவித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற “ஒருங்கிணைத்து வெல்லும் பெண்கள்” நிகழ்ச்சியில் 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாகவும், ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 கோடியே 30 லட்சம் பெண்கள் பயனடைந்து வருவதாகவும் கூறினார். மேலும், தகுதியுள்ள பெண்கள் மேல்முறையீடு செய்தால் அவர்களுக்கும் இத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு ஜிடிபியில் முதலிடம் பெற்றுள்ளதாகவும், இது அரசின் கூற்று அல்ல; ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல் எனவும் முதலமைச்சர் கூறினார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். திமுகவின் சாதனைகளை மக்களிடம் வீடு, வீடாக எடுத்துச் சொல்லி வாக்குகளாக மாற்றி, ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கையும் அவர் எடுத்துரைத்தார்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பனை குறித்து நினைவுகூர்ந்த முதலமைச்சர், அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்த காலத்தில் கூட சட்டமன்றத்தில் துறைசார் கேள்விகளுக்கு முறையாகவும் பொறுப்புடனும் பதிலளித்தவர் என பாராட்டினார். அவரது உரையை எதிர்க்கட்சியினரும் கவனத்துடன் கேட்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த திருமண விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். முத்தரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், டி.எம். செல்வகணபதி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ. மணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)