தருமபுரி – டிசம்பர் 14:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டம், பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் கலந்து கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 63,298 மனுக்களில் தகுதி பெற்ற 32,719 பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி எம்.பி. ஆ.மணி, தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை அறிவித்தபோது, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாது என கேலி செய்ததாகவும், பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிதிநிலை பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதிகளை வழங்காமல் வஞ்சித்து வரும் சூழலிலும், பெண்கள் மேம்பாடு முக்கியம் என்ற நோக்கில் ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என கூறினார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பெண்கள், மாதந்தோறும் தொகை பெறும் போது முதலமைச்சரின் பெயரை மகிழ்ச்சியுடன் நினைத்து வருவதாகவும், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவர்களது செல்போனுக்கு உரிமைத் தொகை வந்ததற்கான குறுஞ்செய்தி வருவதால் பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பின்பற்றி தற்போது 10 மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், திராவிட மாடல் அரசு நாடு முழுவதற்கும் முன்னோடியாக செயல்பட்டு வருவதாக கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் எப்போதும் முதலமைச்சருக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)