பாலக்கோடு, டிச. 14:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகமரை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (52) மீன் வியாபாரியாக இருந்து வந்தார். இவருக்கு மனைவி வளர்மதி, மகன் கோபி மற்றும் மகள் கெளசல்யா உள்ளனர்.
கோவிந்தராஜ், நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்திற்கு மீன் வாங்கச் செல்ல சோளப்பாடியைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் என்பவரின் மினி சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்தார். அதில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் (32), ஆண்டியப்பன் (40), சிவராமன் (35), நடராஜன் (50) ஆகியோருடன் ஆந்திரா சென்று மீன் வாங்கி, மீண்டும் பென்னாகரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இன்று நள்ளிரவில் பாலக்கோடு அருகே கர்த்தாரஅள்ளி நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சென்டர் மீடியனில் மோதியதில் மினி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற நால்வர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாலக்கோடு காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)