காரிமங்கலம், டிச. 16:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூமாண்டஹள்ளி ஊராட்சியில், 2025–2026 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் பெரியபுதூர் காலனியிலிருந்து பெரியபுதூர் ஏரி வரை கால்வாய் அமைக்கும் பணிகளையும், மொட்டலூர் ஊராட்சியில் அதே திட்டத்தின் கீழ் ரூ.6.78 இலட்சம் மதிப்பீட்டில் எச்சனம்பட்டி முதல் வெள்ளகொட்டாய் வரை கால்வாய் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, காரிமங்கலத்தில் SCPAR நிதியின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், காரிமங்கலம் தேர்வுநிலைப் பேரூராட்சிக்குட்பட்ட கைலாச கவுண்டர் கொட்டாயில் ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும் அவர் ஆய்வு செய்தார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு, சுகாதாரம், கல்வி வசதிகள், குழந்தைகளின் எடை–உயரம், தூய்மை மற்றும் வருகைப் பதிவு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, தேவையான மேம்பாடுகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட காமராஜ் நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (KNMT–2024–2025) கீழ் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சர்வோத்தமன், திருமதி. இலட்சுமி, காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. கோமதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)