நல்லம்பள்ளி, டிச.16:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சிவாடியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தின் தருமபுரி டெர்மினல் மற்றும் VDPL பைப்லைன் பிரிவு சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் இன்று (16.12.2025) “வெளிப்புற மாதிரி ஒத்திகை” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோலியம் குழாய் பாதையில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை எதிர்கொள்வதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறைகள் மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை சோதித்து மதிப்பிடும் நோக்கில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அங்கீகாரம் இல்லாத அகழ்வுப் பணியால் பைப்லைனில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழும் நிலை, மேலும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்படும் நிலை என இரண்டு அவசரகால சூழ்நிலைகள் உருவகப்படுத்தப்பட்டன.
ஒத்திகை நடைபெறும் நேரத்தில் சிவாடி கிராமப் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் இந்த பயிற்சியை நேரில் பார்வையிட்டதுடன், அவசரகாலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட அவசரகால மேலாண்மை குழு உருவகப்படுத்தப்பட்ட அவசர நிலைகளை துரிதமாகவும், ஒருங்கிணைந்த முறையிலும், திறம்பட கையாள்ந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வகையான அவசரகால மேலாண்மை பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, மாவட்டத்தின் பாதுகாப்பு தயார்நிலை மேலும் வலுப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்வை நேரில் பார்வையிட்டு, அவசரகால மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் திருமதி. பூவிதா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் செல்வி ப.அம்பிகா மற்றும் காவல், தீயணைப்பு, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)