தருமபுரி, டிச.15:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025–26 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.12.2025) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி மற்றும் அளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், நடப்பு 2025–26 அரவைப் பருவத்திற்கு 7,342.55 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2,35,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கரும்பு தோட்டங்களில் இருந்து ஆலையிற்குக் கரும்பை கொண்டு வருவதற்காக 148 லாரிகள், 82 டிராக்டர்கள், 42 டிப்பர்கள் மற்றும் 20 மாட்டு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் சுத்தமான கரும்பை வெட்டி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த அரவைப் பருவத்தில் 10.43 சதவீத சர்க்கரை கட்டுமானம் எய்தியதன் அடிப்படையில், நடப்பாண்டில் அரவை செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.3,612.28 வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பொதுப்பேரவை தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து அங்கத்தினர்களுக்கும் பங்கு ஒன்றுக்கு ரூ.667 வீதம் பங்கு ஆதாயத் தொகை சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 2024–25 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய 2,110 அங்கத்தினர்களுக்கு தமிழக அரசு சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.3,497 வழங்க உத்தரவிட்டு, மொத்தமாக ரூ.3.66 கோடி நேரடியாக வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எதிர்வரும் 2026–27 அரவைப் பருவத்திற்காக 14,000 ஏக்கர் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 4,30,000 மெட்ரிக் டன் கரும்பு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். கரும்பு வெட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட கரும்பை இறக்குவதற்கான தனி இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறினார். கடந்த 2024–25 அரவைப் பருவத்தில் 1,372 மெட்ரிக் டன் கரும்பு இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு பருவத்தில் 207.10 ஏக்கர் பரப்பில் அகலப்பார் முறையில் நடவு செய்யப்பட்டு சுமார் 7,650 மெட்ரிக் டன் கரும்பு இயந்திர அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகள் அகலப்பார் முறையில் நான்கரை அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்து, தமிழக அரசின் மானியத்துடன் கூடிய நிலத்தடி சொட்டு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில அரசின் கரும்பு நடவு மானியத் திட்டத்தின் கீழ் கடந்த மற்றும் நடப்பு நிதியாண்டுகளில் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.
முன்னதாக, சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொடக்கம் முதல் சிறப்பாக பணியாற்றிய மூத்த கரும்பு அலுவலர் திருமதி.கோகிலா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி, ஆலையின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநரும் மாவட்ட வருவாய் அலுவலருமான திருமதி.ஆர்.பிரியா, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் திரு.சரவணன், கரும்பு பதிவு செய்துள்ள ஆலை அங்கத்தினர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)

