தருமபுரி, டிச.15:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 478 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.12.2025) பெற்றுக்கொண்டார். இந்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ள நிலையில், அதன்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இன்றைய கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா வழங்கல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாகவும் மொத்தம் 478 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வுகளை விரைந்து வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.
மேலும், இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தருமபுரி மாவட்டம் சிந்தல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மரு. ரஞ்சித் சிங் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டினார். இவர் நந்து ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று, தமிழக அளவில் நடைபெற்ற 50-வது தமிழ்நாடு துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஏழாம் இடமும், தென்னிந்திய அளவில் கேரளாவில் நடைபெற்ற 16-வது ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் ஆறாம் இடமும், பேரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா உத்தரகாண்டில் நடத்திய மண்டல போட்டியில் வெற்றியும், கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பான வெற்றியும் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச பேரா ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றிற்கு தேர்வு பெற்றுள்ள அவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.தேன்மொழி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திருமதி.தே.சாந்தி உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)