ஓகேனக்கல், ஜூன் 29:
தருமபுரி மாவட்ட சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் செயல்பட்டு வரும் உணவகங்கள் மற்றும் மீன் வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதித்தனர்.
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, செயற்கை நிறமூட்டிகளை மீன் வறுவலில் சேர்ப்பது உள்ளிட்ட புகார்கள் உணவு பாதுகாப்புத் துறையின் புகார் எண்ணில் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
நீர்வீழ்ச்சி செல்லும் பாதை, பேருந்து நிலையம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், மீன் வறுவல் மற்றும் பலகாரக் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த மூன்று உணவகங்களில் இருந்து பலமுறை பயன்படுத்தப்பட்ட 4 லிட்டர் சமையல் எண்ணெய், செயற்கை நிறமூட்டிகள், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உரிய விவரங்கள் இல்லாத அப்பளப் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
விதிமீறலில் ஈடுபட்ட மூன்று கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல், உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட RUCO (Reused Cooking Oil) சேகரிப்பு முகவர்களிடம் ஒப்படைத்து உரிய தொகையைப் பெற வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இதனிடையே, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த மற்றொரு உணவகத்தில், சமைத்த இறைச்சி மற்றும் மசாலா பொருட்கள் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதுடன், அந்த உணவக உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஐந்து நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்யுமாறு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆய்வின் போது, மீன் வறுவல், பஜ்ஜி, போண்டா, அப்பளம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பழைய செய்தித்தாள்களில் காட்சிப்படுத்தப்பட்டும், பொதியிடப்பட்டும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்திய அதிகாரிகள், உணவுப் பொருட்களை வாழையிலை, பட்டர் பேப்பர், அச்சிடப்படாத உணவுத் தர காகிதங்கள் அல்லது அலுமினிய தட்டுகளில் மட்டுமே பரிமாற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விதிமீறலுக்காக இரண்டு விற்பனையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வுக்குப் பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் கூறுகையில், மீன் வறுவல் மற்றும் உணவுப் பொருட்களை தூசி உள்ளிட்ட மாசுபாடுகள் படாத வகையில் கண்ணாடிப் பெட்டிகளில் பாதுகாப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும், செயற்கை நிறமூட்டிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களை பரிமாறவோ, பொதியிடவோ கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, அதை காலமுறைப்படி புதுப்பித்து, சுகாதாரமான முறையில் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
.gif)

.jpg)