தருமபுரி, ஜூன் 26:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் கிராமத்தில் உள்ள பழமையான அருள்மிகு மாரியம்மன்–காளியம்மன் கோவில் திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஆனி மாதத்தை முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழா, இந்த ஆண்டும் நான்கு நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, ஊர் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பம்பை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீளமுள்ள தீக்குண்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன் மற்றும் காளியம்மன் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கிராம பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏந்தி வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, 50 அடி உயரம் கொண்ட காளியம்மன் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். விவசாயம் மற்றும் தொழில் வளம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி கிரிக்கெட் போட்டி, கலைநிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் மாக்கனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
.gif)

.jpg)