பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 23:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வழிப்பாதை மறுக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த வயதான தம்பதியரை, சமூக நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் இணைந்து மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கோழி மேக்கனூர் கிராமத்தில் வசித்து வரும் மெஹபூப் (85) என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியரும், அவரது மனைவி நஜ்மா பிபி (80) என்பவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் ஆகி, பெண் குழந்தைகள் வெளியூரிலும், மகன் வெளிநாட்டிலும் பணியாற்றி வருகிறார். இதனால், வயதான தம்பதியினர் சொந்த நிலத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தனர்.
இந்த தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டுமானால், இரண்டு ஆற்றங்கரைகளை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால், அவர்களது மகன் சானவாஸ் மற்றும் மகள் ஷர்மிலி ஆகியோர், கடந்த ஆண்டு அக்பர் என்பவரிடம் இருந்து 94 சென்ட் நிலத்தை ரூ.25 லட்சத்திற்கு வழிப்பாதைக்காக வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தில் பாதுகாப்பு காரணமாக கேட் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமீபத்தில் நிலத்தை விற்ற அக்பர், மீண்டும் பணம் கேட்டு, வயதான தம்பதியினர் வெளியே வர முடியாத வகையில் அந்த வழிப்பாதை கேட்டை பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்குச் செல்ல முடியாத அளவிற்கு தம்பதியினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்தனர். இந்த தகவல் அறிந்த சமூக நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முதியவர்களை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வயதான தம்பதியருக்கு நேர்ந்த இந்த அவல நிலை குறித்து உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வழிப்பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)