பாப்பாரப்பட்டி. டிச. 23:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் (CITU) சார்பில், தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க நிர்வாகி சண்முகம் தலைமையில் தொழிற்சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும், ஒன்றிய மோடி அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து, முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தி சட்டமாக்கியுள்ளதாகவும், அவற்றை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் வேலைநிலை, பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், 100 ஆண்டுகள் போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக பாப்பாரப்பட்டியில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தின் போது, ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு, தொழிலாளர் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்திய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

.jpg)