பாப்பாரப்பட்டி, டிச.18:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ஊழல் மற்றும் மத மோதலை தூண்டும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களே சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வார்டுகள் கொண்ட பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 6-வது வார்டு கவுன்சிலர் ஹாஜிரபி, 13-வது வார்டு கவுன்சிலர் ஜபியுல்லா ஆகியோர், தற்போதைய பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜ் மற்றும் செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் இணைந்து தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகளை வழங்காமல் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பேரூராட்சி நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டபோது, தகவல் வழங்க மறுக்கப்படுவதாகவும் கூறினர். தங்களது வார்டில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல், இந்து-முஸ்லிம் மத மோதலை தூண்டும் வகையில் தங்களை எதிராக நிலைநாட்ட முயற்சி செய்யப்படுவதாகவும், இது திட்டமிட்ட செயல் என்றும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, தங்களை வெற்றி பெறச் செய்த ஜமாத்திடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த அவர்கள், பேரூராட்சி தலைவர் பிருந்தா மற்றும் செயல் அலுவலர் ஆயிஷாவிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்தை மீட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை முன்னிறுத்தி, வரும் 23-ஆம் தேதி ஜமாத் மக்களுடன் இணைந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.
திமுக சிறுபான்மை மாவட்ட தலைவரும், ஜமாத் தலைவருமான தவுலத்பாஷா தலைமையில், திமுக கவுன்சிலர்களே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது, பாப்பாரப்பட்டி பகுதியில் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)