பாலக்கோடு, டிச.18:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எருதுகூடஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, பிக்கனஅள்ளி உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் விவசாய நிலங்கள் சேதமடைவதுடன், மனித உயிர்களுக்கும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் தொடர்ச்சியான அபாயம் ஏற்பட்டு வருகிறது.
காடுகளை விட்டு யானைகள் வெளியே வராத வகையில் காப்புக்காடுகளைச் சுற்றி யானைப்பள்ளம் மற்றும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அவ்வாறு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டு யானை ஒன்று காப்புக்காடுகளை விட்டு வெளியேறி தண்டுகாரணஅள்ளி, வாழைத்தோட்டம், காட்டுமாரியம்மன் கோயில் பகுதி, காவேரியப்பன்கொட்டாய், கூசுக்கல், எருதுகூடஅள்ளி, பொம்மிடி, நிலகுட்டஅள்ளி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டி கூட்ரோடு, செங்கோடப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.
யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், வனத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வழங்குவதுடன் மட்டுமே செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, விவசாயிகளின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மனித – வனவிலங்கு மோதல்களை தடுக்கவும், காப்புக்காடுகளைச் சுற்றி உடனடியாக யானைப்பள்ளம் மற்றும் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

.jpg)