பென்னாகரம், டிச.19:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை கோம்பை பகுதியில் நாகாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சக்தி மிகுந்த வீர ஆஞ்சநேயர் கோயிலில் 13-ஆம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதாக நம்பப்படும் இந்த ஆஞ்சநேயர் கோயிலில், பெரும்பாலை கோம்பை, செம்மனூர், பள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி தினத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடிக்கம்பத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஜெயந்தி தினமான நேற்று, ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். மேலும், கோயில் நிர்வாகத்தின் சார்பில் தரிசனம் செய்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்துடன் வழிபாடு செய்தனர்.

.jpg)