இன்டூர், டிச.19:
தமிழகம் முழுவதும் இன்று ஆஞ்சநேயர் பிறந்தநாளான அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இன்டூர் அருகே குப்புசெட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள 31 அடி உயரம் கொண்ட ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமியின் 13-ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய அம்சமாக அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா முழுவதும் ஆன்மிக உற்சாகமும், பக்தி உணர்வும் நிறைந்து காணப்பட்டது.

.jpg)