தருமபுரி, டிசம்பர் 22:
தருமபுரி மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், புலிகரையை மையமாக கொண்டு புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 2025–2026 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, புலிகரை சுற்றுவட்டார பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் என மு.க. ஸ்டாலின், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில், இன்று (22.12.2025) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக, பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட புலிகரை காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புதிய காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம், புலிகரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S. மகேஸ்வரன், B.Com., BL., அவர்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய காவல் நிலையம் செயல்படத் தொடங்கியதன் மூலம், பொதுமக்கள் குற்றச்சாட்டு புகார்கள் அளிப்பதில் ஏற்படும் தூரச் சிரமங்கள் குறையும் என்றும், சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு, குற்ற விசாரணை, அவசர உதவி உள்ளிட்ட பணிகள் விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Permalink:

.jpg)