பாப்பிரெட்டிப்பட்டி, அக்.08 -
தருமபுரி மாவட்டம் உருவாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஒட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தனித்துவமான முறையில் கொண்டாடினர். பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் “தருமபுரி 60” என்ற எழுத்து வடிவில் அமர்ந்து, மாவட்டத்தின் வளர்ச்சியையும் பெருமையையும் போற்றினர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையேற்றார். உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், தேசிய பசுமை படை ஆசிரியர் ராஜாமணி, மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் ஆகியோர் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.