Type Here to Get Search Results !

தருமபுரியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பொருட்களில் உள்ள கலப்படம் கண்டறிந்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தருமபுரி, மார்ச். 04:


தருமபுரி மாவட்டத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் பால், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பதை நிகழ்விடத்திலேயே பரிசோதித்து, விதிமுறைகள் மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்தி, சேலம் பகுப்பாய்வு கூடத்தின் நடமாடும் பகுப்பாய்வு வாகன பொறுப்பாளர் முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.


கடந்த வாரம் ஆந்திராவில் கலப்பட பால் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை நிலையங்கள், தயாரிப்பு கூடங்கள் மற்றும் விநியோக நிலையங்களில் மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவின்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


தருமபுரி ஒன்றியத்துக்குட்பட்ட எட்டிமரத்துப்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், பருத்திநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பனீர், கிரீம், நெய் போன்ற பால் தயாரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டு, நான்கு இடங்களில் எடுத்த பால் மாதிரிகளில் இரண்டு இடங்களில் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டது. மேலும் சட்ட ரீதியான மாதிரிகள் எடுத்து மேல்நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.


மேலும் மேல்காரவோணி, பென்னாகரம் சாலை கோதுமை மாவு மில் அருகில், சோகத்தூர் கூட்ரோடு மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி, உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  • மூன்று இடங்களில் சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளில் ஒன்றில் பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது.

  • வருத்த நிலக்கடலை மற்றும் கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

  • சம்பந்தப்பட்ட மூன்று கடை உரிமையாளர்களுக்கு தலா ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது.


காரவோணி நான்கு ரோடு சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரியில் ஆய்வின் போது:

  • தயாரிப்பு கூடம் சுகாதாரமின்மை

  • செய்தித்தாள்களில் உணவு பரிமாறுதல்

  • நெகிழி கவர்கள் பயன்பாடு

  • காலாவதியான எசென்ஸ் பாட்டில்கள்

  • லேபிள் இல்லாத குளிர்பானங்கள்

கண்டறியப்பட்டதால் பறிமுதல் செய்து அகற்றப்பட்டது. அந்த கடைக்கு ₹2000 அபராதம் விதிக்கப்பட்டது.


மேலும் பென்னாகரம் சாலை மேம்பாலம் அருகிலுள்ள ஒரு பேக்கரியில் தேயிலையில் கலப்படம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு ₹2000 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.


அதே நேரத்தில் ஆய்வு செய்தபோது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை விநியோகித்த வாகனத்தில் சரியான லேபிள் மற்றும் தயாரிப்பு தேதி இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டதால் சப்ளையருக்கு ₹2000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகள் மீறிய ஒரு உணவகம், ஒரு பலகார கடை மற்றும் ஒரு ஜூஸ் கடைக்கு தலா ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது.


ஆய்வின்போது பொதுமக்கள் கூடும் இடங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் நிறுத்தப்பட்டு, அதில் உள்ள எல்இடி திரை மூலம் உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு காணொளிகள் காண்பிக்கப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies