
தருமபுரி, அக். 08 -
தருமபுரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் அவர்களிடமிருந்து அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பு நீக்கப்பட்டு, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற “அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதும் திமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் நேர்காணல் நடைபெற்றது. அந்த சந்திப்புக்குப் பின், தருமபுரி மாவட்ட நிர்வாக அமைப்பில் முக்கிய மாற்றமாக, அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பு மாற்றம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், பி. பழனியப்பனுக்கு அதிர்ச்சியாக, அவரது கட்டுப்பாட்டிலிருந்த அரூர் தொகுதி பறிக்கப்பட்டது.
கட்சி சார்ந்த பணிகளில் தாமதம் அல்லது செயல்பாடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டால், அந்த மாவட்ட செயலாளர் பதவியை நீக்குவது, பதவி மாற்றுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக உயர் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதனால், தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பதவி பறிப்பு அச்சம் நிலவுகிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.