பாப்பிரெட்டிபட்டி, செப்டம்பர் 1 (ஆவணி 16) :
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், பூனையானூர் வருவாய் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்கூடம் பராமரிப்பு செய்யப்படாததால் தற்போது பாழுடைந்த நிலையில் உள்ளது. 2014–2015 ஆம் நிதியாண்டில் ஒருமுறை பழுது பார்த்து பயன்பாட்டுக்கு வந்த இந்த நிழற்கூடத்தின் மேல்கூரை தற்போது முற்றிலும் சேதமடைந்து சிமெண்ட் கான்கிரீட் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தில் உள்ளது. இருந்தாலும், மழை மற்றும் வெயிலில் பாதுகாப்புக்காக பயணிகள் இதையே பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த நிதியாண்டில் பாப்பிரெட்டிபட்டி, மோளையானூர், பி.பள்ளிப்பட்டி, பையர்நத்தம் ஆகிய இடங்களில் உள்ள நிழற்கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் பூனையானூரில் அமைந்துள்ள இந்த நிழற்கூடம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “எப்பொழுதும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள இந்த நிழற்கூடம் மூலம் உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
— தகடூர் குரல் பாப்பிரெட்டிபட்டி செய்தியாளர் ஜெ. அருண்குமார்