காரிமங்கலம், செப்டம்பர் 27 | புரட்டாசி 11:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பல்லேனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதம்மாள் (55) நிலத்தகராறு தொடர்பான மோதலில் கொல்லப்பட்டார். மாதம்மாளின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மகன்கள் வெளியூரில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கும், உறவினரான அருன்குமார் (27) என்பவருக்கும் நிலத் தகராறு நீண்டநாளாக இருந்து வந்தது.
இன்று மாலை மாதம்மாள் வீட்டிற்கு வந்த அருன்குமார், சொத்து விவகாரம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். மாதம்மாள் சொத்து வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருன்குமார், கடப்பாரையால் மாதம்மாளின் வயிற்றில் குத்தி, பின்னர் கிரைண்டர் கல்லால் தலையில் தாக்கியுள்ளார். கடுமையாக காயமடைந்த மாதம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதே சமயத்தில் தடுக்க முனைந்த மாதம்மாளின் மருமகள் ஆர்த்தி (25) மீது தாக்குதல் நடத்தி, கையொன்று முறிவு அடைந்ததுடன் பலத்த காயமடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அருன்குமார் தப்பிச் சென்றார். தகவலறிந்து வந்த காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், மாதம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஆர்த்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய அருன்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.