பாலக்கோடு, டிச. 24 :
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலுமிச்சனஅள்ளி காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வைத்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தேரிகாடு கிராமத்தை சேர்ந்த சேட்டு (45) மற்றும் மாது (45) ஆகிய இருவரும், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில், நேற்று முன்தினம் இரவு எலுமிச்சனஅள்ளி காப்புக்காடு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று காலை, வெடிகுண்டுகளில் வன விலங்குகள் சிக்கியுள்ளதா என்பதை பார்ப்பதற்காக மீண்டும் வனப்பகுதிக்குச் சென்ற போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன காவலர்களுக்கு இருவரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தேடுதல் நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து சேட்டு மற்றும் மாது ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துவது மிகக் கடுமையான குற்றம் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)