தருமபுரி – டிசம்பர் 25
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வேப்பிலைஅள்ளி கிராமத்தில் நில அளவீட்டு நடவடிக்கையின்போது, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினரும் வருவாய் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேப்பிலைஅள்ளியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான 40 சென்ட் விவசாய நிலம் தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரமணியின் தந்தை சுயநினைவு இழந்த நிலையில் இருந்தபோது, தானமாக நிலத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுப்ரமணி, அந்த தானப் பத்திரத்தை ரத்து செய்துள்ளதுடன், நிலம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வழக்கு நிலுவையில் இருந்தபோதும், வருவாய் ஆய்வாளர் கோகிலா மற்றும் மகேந்திரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரசு ஆகியோர், நீதிமன்ற தீர்ப்பு முருகனுக்கு ஆதரவாக வந்துவிட்டதாக கூறி, நிலத்தை அளவிட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து சுப்ரமணியும் அதிகாரிகளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அத்துமீறி நெல் வயலில் இறங்கி நில அளவீட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகனின் மனைவி மாதம்மாள் (45), உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தை பார்த்தும், அங்கு இருந்த காவல் துறையினரும் வருவாய் துறையினரும் உடனடியாக தடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி சென்று தீக்குச்சியை அணைத்து, மாதம்மாளின் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். ஒரு உயிர் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில், நிலத்தை அளந்து தீருவோம் என்ற போக்கில் அதிகாரிகள் செயல்பட்டதாக அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வேப்பிலைஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வருவாய் மற்றும் காவல் துறையினரின் பொறுப்பற்ற செயல்பாடு குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

.jpg)
.jpg)