பாப்பிரெட்டிப்பட்டி, ஆக 26 (ஆவணி 10)
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமின் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் மூடப்பட்டதால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் மனுக்கள், புதிய மின் இணைப்பு விண்ணப்பங்கள், அடங்கல் பெறுதல், கல்லூரி புதிதாக சேரும் மாணவர்களின் உழவர் கல்வி உதவித்தொகை பெறுதல், இறப்பு பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் தினசரி கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் தற்போது முகாமின் காரணமாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் பணிகள் நிறைவேறாமல் தவிக்கின்றனர்.
இதனால், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களை கிராம நிர்வாக அலுவலகங்களின் வளாகத்திலேயே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உடனடியாக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.