பாப்பிரெட்டிப்பட்டி, ஆக 02 | ஆடி 17 -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் கிராமத்தில் உள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, 2024-25 அரவைப்பருவத்தில் மொத்தம் 104,777.792 மெட்ரிக் டன் கரும்பு சப்ளை செய்யப்பட்டு அரைக்கப்பட்டது. இதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,797 அங்கத்தினர்களிடமிருந்து 81,036.984 மெட்ரிக் டன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 208 அங்கத்தினர்களிடமிருந்து 12,946.948 மெட்ரிக் டன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 105 அங்கத்தினர்களிடமிருந்து 10,793.860 மெட்ரிக் டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.
ஆலைக்கு கரும்பு வழங்கிய அங்கத்தினர்களுக்கு, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் மொத்தம் ரூ.3,65,67,430/- நேரடியாக வங்கி கணக்குகளில் வரவுசெய்யப்பட்டது. உரிய நேரத்தில் ஊக்கத்தொகை வழங்கியதற்காக, தமிழக முதல்வர், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், சர்க்கரைத்துறை அமைச்சர், வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு, கரும்பு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆலை அதிக இலாபத்துடன் செயல்பட்டு வருவதோடு, அகில இந்திய அளவில் சர்க்கரை கட்டுமானத்தில் தொடர்ந்து முதலிடம் பெற்றதற்காக, அங்கத்தினர்கள் ஆலை நிர்வாகத்துக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தனர். நடப்பு 2024-25 நடவு பருவத்தில் கரும்பு பதிவு செய்துள்ள அங்கத்தினர்கள், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் கரும்பிற்கான சிறப்பு மானியத் திட்டம் ஆகியவற்றின் பயனை பெற, தங்களது நில உடமை ஆவணங்களை கோட்டக் களப்பணியாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.