தருமபுரி - மார்ச் 12:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து இரவு பகலாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாலக்கோடு அருகே உள்ள எலங்காளப்பட்டி, குத்தலஹள்ளி, கரகதஹள்ளி, பேளாரஹள்ளி, புலிக்கல் வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைகள், பொதுப்பணித்துறை ஏரிகள் மற்றும் ஊராட்சி ஏரிகளில் இருந்து நொரம்புமண் டிராக்டர்கள் மற்றும் கர்நாடக பதிவு எண்கள் கொண்ட டிப்பர் லாரிகளில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் மலைகளை குடைந்து மற்றும் ஊராட்சி ஏரிகளில் இருந்து மண் எடுக்கும் சமூக விரோதிகளுக்கு சில அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களில் நொரம்புமண், கிராவல் மண், உளிக்கல், கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக எதிர்காலத்தில் விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அதிகாரிகளின் ஆதரவுடன் இரவு பகலாக மண் கடத்தல் நடைபெறுவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி, இயற்கை வள கொள்ளையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)