பென்னாகரம் - மார்ச் 12:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு துணை ராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பென்னாகரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உணர்த்தவும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த அணிவகுப்பை பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாபு, சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். மேலும் துணை ராணுவ படை கமாண்டோ குமார் சௌரவ் தலைமையில் 50 துணை ராணுவத்தினர் மற்றும் 60 காவல்துறையினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)